ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஒரு பகுதியில் ஞானேஸ்வர் என்ற 27 வயது நபர் வசித்து வருகிறார். இவர் அனுஷா (27) என்பவரை காதலித்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதில் ஞானேஸ்வர் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் நடத்தி வரும் நிலையில் 2 இடங்களில் அந்த ஹோட்டலின் கிளை இருக்கிறது.

இவருடைய மனைவி அனுஷா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஞானேஸ்வர் மற்றும் அனுஷாவுக்கு இடையே நேற்று காலை மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் ஞானேஸ்வர் தன் மனைவியின் கழுத்தை நெரித்த நிலையில் அவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார். உடனே பதறிப்போன அவர் தன் மனைவியை ஆம்புலன்ஸ் மூலம் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.

இதனையடுத்து ஞானேஸ்வர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.