தமிழகத்தில் பெரும்பாலான குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளில் உள்ளது. அவற்றின் விற்பனை மற்றும் பதிவு சமயங்களில் குடியிருப்பு களுக்கான மதிப்பில் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைவு என்பதால் அரசுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படுகின்றது. அதேசமயம் வணிகரீதியான செயல்பாடுகள் உள்ள இடங்கள் குடியிருப்புக்கான மதிப்புகளாக தொடரப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் 10% வரை பெருநகரங்களில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு சதவீதங்கள் வரை நில வழிகாட்டி மதிப்பை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் பதிவுத்துறை தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து பகுதிகளுக்கும் சர்வே எண்கள் வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக உள்ள தேர்வு மற்றும் சர்வே எண்களை மட்டுமே மாற்றியமைக்க உள்ளதாகவும் அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள் tnreginet.gov.in என்ற பதிவுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நில வழிகாட்டி மதிப்புகளை சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் சொத்துவரி மற்றும் மின் ரசீது போன்ற 10 ஆவணங்களின் மூலமாக ஆய்வு செய்து அதற்கான விவரங்களை 5 நாட்களுக்குள் தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.