
சித்திரை விஷு பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் மதுபானக் கடைகளுக்கு மக்கள் பெருமளவில் திரண்டனர். பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே கரிம்பனக்கடவு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடையின் முன்பு நேற்று முன்தினம் இரவு நீண்ட வரிசை காணப்பட்டது.
அதில் ஒரு 10 வயது சிறுமி மற்றவர்கள் போல் மது வாங்குவதற்காக வரிசையில் நின்று இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி அங்கு எப்படி வந்தார் என கேட்டபோது, அவரது தந்தை தான் சிறுமியை வரிசையில் நிறுத்தியதாகத் தெரியவந்தது.
இதைப்பார்த்த மக்கள் அந்த நபரிடம் குழந்தையை இப்படி வரிசையில் நிறுத்தக் கூடாது என்று கூறினர். ஆனால் அவர் அதைக் கேட்க மறுத்துவிட்டார். இந்த நிகழ்வை அங்கு இருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், அந்த வீடியோ நிமிடங்களில் வைரலாக பரவியது.
சிறுமியை மதுக்கடையில் வரிசையில் நிறுத்திய தந்தையின் நடவடிக்கையை பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்தாலா போலீசார் உடனடியாக விசாரணை ஆரம்பித்தனர். வீடியோவில் இருந்த அடிப்படையில், அந்த சிறுமியின் தந்தையை அடையாளம் கண்டுபிடித்து, அவரை போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.