தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கில மொழி தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் காப்பியடித்து எழுதுவதற்கு தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரும், அறை கண்காணிப்பாளரும் உதவி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரையும், அறை கண்காணிப்பாளரையும் விசாரணை நடத்தினார்.மேலும் மாணவர்கள் தேர்வு எழுதிய வகுப்பறையை சோதனை செய்தனர்.

ஆனால் எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் முதன்மை கண்காணிப்பாளரை அரசு பொது தேர்வு பணியில் இருந்து விடுவித்து பணிமாற்றம் செய்தனர். அரை கண்காணிப்பாளரை கல்வி மாவட்ட தேர்வு மையத்திற்கு பணிமாற்றம் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.