ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது வீட்டிற்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை வணிக இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், இந்த மாற்றத்திற்காக உதவி செயற்பொறியாளர் புனிதா ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

சரவணன், ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் திட்டமிட்டு ருசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை புனிதா, வணிக ஆய்வாளர் மோனிகா மற்றும் போர்மேன் பல்கிஸ்பேகம் ஆகியோரிடம் அளித்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மூவரையும்  கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், புனிதாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.1.85 லட்சம் ரொக்கம், பல லட்சம் மதிப்பிலான பிக்சட் டெபாசிட் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவத்தின் பின்னணியில், வேலூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நளினி, லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட உதவி செயற்பொறியாளர் புனிதா, வணிக ஆய்வாளர் மோனிகா மற்றும் போர்மேன் பல்கிஸ்பேகம் ஆகிய மூவரையும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக உத்தரவிட்டார்.