
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி சமீப காலமாக பார்மில் இல்லாத நிலையில் இந்தியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பையிலிருந்து வெளியேறியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த அணியின் முன்னாள் வீரர்களே கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதே நேரத்தில் போட்டியை நடத்தும் ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதால் தான் இந்தியா வெற்றி பெறுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக் இந்திய அணிக்கு ஒரு சவால் விட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, அரசியல் காரணங்களை ஒதுக்கி வைத்து விட்டு விளையாடினால் இந்திய வீரர்கள் சிறந்தவர்கள் என்று கூறலாம். அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் என்று பாராட்டலாம். உண்மையாகவே நீங்கள் ஒரு நல்ல அணியாக இருந்தால் பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகள், 10 ஒரு நாள் போட்டிகள், 10 டி20 போட்டிகளில் விளையாடுங்கள். அப்போது எல்லாம் தெளிவாகிவிடும் என்று கூறியுள்ளார்.மேலும் பாகிஸ்தான் அணி சவால்களை எதிர்கொள்கிறது என்று கூறியவர் இந்த பிரச்சனையை முறையாக கையாண்டால் கண்டிப்பாக தீர்க்கலாம் என்றும் கூறினார்.