
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். அதன் பிறகு தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு விசிக கட்சி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சி அந்தஸ்து வழங்க இருக்கிறது. இதேபோன்று நாம் தமிழர் கட்சி தேர்தலில் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
இதனால் அந்தக் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மாநில கட்சி அந்தஸ்து வழங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தற்போது விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெற்று மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் பெற்றுள்ளது. மேலும் அந்த இரு கட்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.