தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் டி. இமான். இவர் தன்னுடைய பல பாடல்கள் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் மெகா சீரியல்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இசையமைத்து வந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம், மைனா, கும்கி மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார்.

இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இமான் தன்னுடைய 42 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவர் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். தான் இறந்த பிறகு தன்னுடைய உடல் உறுப்புகள் யாருக்காவது பயன்படுவது போல் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய உடல் உறுப்புகளை இமான் தானம் செய்து அதற்கான புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.