தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 39 எம்பிகள் இருந்த போதும் நீட் தேர்வை எதிர்த்து ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத திமுக தற்போது 40 எம்பிக்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்த தீர்மானத்தை கொண்டு வரவில்லை. அதற்கு பதிலாக தமிழக சட்டசபையில் நீட் தேர்வு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது அவர்களின் அரசியல் வித்தை.

அதாவது விஷச்சாராய மரணங்களை திசை திருப்புவதற்காக திமுக கொண்டுவரும் கண்துடைப்பு நாடகம்தான் இது. இனி மக்கள் இதை நம்ப மாட்டார்கள். நீட் தேர்வை நாடாளுமன்றத்தின் மூலம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய பாஜக அரசை கேட்டுக்கொள்கிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வு ஒழியும் வரையில் அதிமுகவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.