
சென்னை மாவட்டம் கோபாலபுரத்தில் பிரபல மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆசியா பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 12-ஆம் தேதி ஆஷியா தேர்வு எழுதி கொண்டிருந்த போது அறையில் இருந்து திடீரென வெளியே ஓடி வந்தார். அதன் பிறகு மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் ஆஷியாவின் இடுப்பு மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே ஆஷியாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆஷியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஷியாவின் சகோதரி இறந்துவிட்டார். இதனால் ஆஷியா மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. கடந்த வாரம் அவரது சகோதரிக்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள். இதனால் மன உளைச்சலில் இருந்த அஷியா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.