
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள சரண பசவேஸ்வரா நகரத்தை சேர்ந்த அமரேஷ் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் அமரேஷ், திருமணத்தின் பின்னர் தனது மனைவியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
ஆனால், பூஜா கருப்பாக இருப்பதை காரணமாகக் கொண்டு, அவருடைய மாமியார், மாமனார், மைத்துனர் உள்ளிட்ட அமரேஷின் குடும்பத்தினர் தொடர்ந்து அவமதிப்புகளையும், மன ரீதியான காயங்களையும் ஏற்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொல்லைகள் காரணமாக விரக்தியடைந்த பூஜா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி வெறும் நான்கு மாதங்களிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூஜா தற்கொலை செய்வதற்கு முன் எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டு, அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூஜாவின் குடும்பத்தினர் அளித்த பேட்டியில், “எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரை அமரேஷின் குடும்பத்தினர் கொன்றுவிட்டனர். அதை தற்கொலை போல காண்பிக்க நாடகம் நடத்துகிறார்கள்” என கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.