கேரளா மாநிலம் திருச்சூரின் மானுத்தி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காயமடைந்த பூனைக்கு உதவ முயன்ற 41 வயது சிஜோ சிட்டிலப்பிள்ளி என்ற நபர், வேகமாக வந்த லாரியால் மோதப்பட்டு உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிஜோ, சாலை நடுவே கிடந்த காயமடைந்த பூனைக்கு உதவ ஓடிய போது, பூனை எதிர்பக்கம் ஓடியது. அதே நேரத்தில் வேகமாக வந்த லாரி சிஜோ மீது மோதியது. இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிஜோவுக்கு செல்ல பிராணிகள் மீது அதீத பாசம் உண்டு என அக்கம்பக்கத்தவர்கள் கூறுகின்றனர். அவருடைய வீட்டில் மூன்று பூனைகள் மற்றும் ஐந்து நாய்கள் இருந்துள்ளன. தெரு நாய்களுக்கு தினமும் உணவு வைக்கின்ற பழக்கம் அவருக்கிருந்தது.

அவர் தனிமையாக வாழ்ந்தாலும், விலங்குகளிடம் காட்டிய அன்பு காரணமாக பலர் அவரை நினைவுகூருகின்றனர். லாரி ஓட்டுநருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.