கர்நாடகா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை NH-150A பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதில், 35 வயதான மௌலா அப்துல் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மௌலா அப்துல் தான் கார் ஓட்டியிருந்ததாகவும், அதிக வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள டிவைடரை மோதி குறைந்தது 15 முறை புரண்டு கவிழ்ந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த பயங்கர விபத்து அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் குடும்பம் பெங்களூருவிலிருந்து யாத்கிரி மாவட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. காயமடைந்த 3 பேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் விபத்துக்கான காரணங்களை தெளிவுபடுத்த போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.