
திருச்சியில் சமீபத்தில் ரவுடி துரைசாமி காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் திருச்சி எஸ்பிஐ எச்சரிக்கும் விதமாக ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். அதோடு திருச்சியில் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவுக்கு தலைகள் சிதறும் என்று கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.
இப்படி காவல்துறை அதிகாரிகளுக்கு பகிரங்கமாக கொலைவிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தது ராஜபாண்டி (21) என்பது தெரிய வந்தது. இவரை பிடிப்பதற்காக சோமரசம்பேட்டை காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர்களை பட்டாக்கத்தியை காட்டி அவர் மிரட்டியுள்ளார். இருப்பினும் அவரை சுற்றி வளைத்து அதிரடியாக போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இப்படி வீடியோ வெளியிட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட எஸ்பி எச்சரித்துள்ளார்.