
நெல்லையில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த நிலையில் அவர்கள் கண்முன்னே அந்த நபர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக வந்து விசாரித்த நிலையில் போலீசார் தங்கள் கடமைகளை செய்யாமல் பணி நேரத்தில் செல்போனில் மூழ்கி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். அதன் பிறகு போலீசாரின் கண்முன்னே கொலை நடந்தது எப்படி என்று தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கொலை நடந்த போது பணியில் இருந்த அனைத்து காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த நெல்லை படுகொலை சம்பவம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசினார்.
அவர் பேசியதாவது, எந்த சம்பவமும் நடக்காமல் தடுக்க முடியாது. ஆனால் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாகவே குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்கள் தேடப்படுகிறார்கள். காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதால் நீங்கள் காவல்துறையினரை பாராட்டதான் வேண்டுமே தவிர சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது சரியில்ல. இது எந்த விதத்தில் நியாயம். சம்பவம் நடந்தவுடன் அதை தடுக்கக்கூடிய சக்தி திமுக ஆட்சிக்கு இருக்கிறது. நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். விரைந்து கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்துள்ளதால் பாராட்டதான் வேண்டும். ஆனால் பாராட்டுவதற்கு மனதில்லாமல் இந்த சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தொடர்ந்து அதே பல்லவியை பாடுகிறார்கள் என்று கூறினார்.