
நெல்லை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 285 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020 முதல் 2024 வரை, நெல்லை புறநகரில் 211 கொலைகளும், நெல்லை மாநகரில் 74 கொலைகளும் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 2023 – 2024 ஒருவருட காலகட்டத்தில் மட்டும் 45 கொலைகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த குற்றச் செயல்கள், பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலைகளின் பின்னணியில் குடும்ப தகராறு, முன்விரோதம், சாதி மோதல்கள் போன்ற காரணங்கள் அடிப்படை உந்துசக்தியாக இருப்பதாக மாநகர காவல் துறை விளக்கமளித்துள்ளது. இந்த சம்பவங்களில் 60 சிறார்கள் மற்றும் 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 392 பேருக்கு குண்டர் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் மட்டும் 27 பேருக்கு குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வளர்ந்து வரும் இந்த கொலைச் சம்பவங்களை கட்டுப்படுத்த, காவல் துறையின் நடவடிக்கைகள் மேலும் வலுவாக இருக்க வேண்டுமென்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.