தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பார்த்திபன். வார்த்தை வித்தகரான இவர் தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைப்பவர். ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் உலாவ விட்டு அப்ளாசை அள்ளினார். அந்த படம் தேசிய விருது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு விருதுகளையும் குவித்தது.

இந்த நிலையில், “பார்த்திபன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் “நேற்றிரவு, நேற்றைய நண்பரும் இன்றைய தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான திரு விஜய்  அவர்களுடன் ஒரு  உரையாடல்… பஜ்ஜியுடன் தேநீர் ருசித்தல். வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல், இப்படி விடிய விடிய நீண்ட சுவாரசிய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமே…. என பார்த்தால் அது கனவு… ஏன் தான் இப்படி ஒரு பகல் கனவு இரவில் வருகிறதோ? ஆனால் சத்தியமாக வந்தது.

கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் என சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்பந்தமான மந்தமான என் பதில்கள் இப்படி சில பல காரணமாக இருக்கலாம்..” என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் ஒருவேளை பார்த்திபன் விஜய் கட்சியில் சேர போகிறாரோ என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.