
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னால் எம்பியுமான ரவீந்திரநாத் தற்போது ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்களே, நேற்று மாண்புமிகு அம்மா ஜெயலலிதாவின் மறு உருவம் தியாகத் தலைவி சின்னம்மா. இன்று ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிச்சாமி. நாளை யாரோ.? என்ன விளையாட்டு இது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத நிலையில் அது பற்றி அவரிடம் கேட்டபோது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதன்பிறகு எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்ட விழா சமீபத்தில் நடைபெற்ற போது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆட்சியை புகழ்ந்து பேசிய செங்கோட்டையன் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை சொல்லவில்லை.
இதன் காரணமாக தற்போது அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆர்பி உதயகுமார் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசி ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவமாக திகழ்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை மீட்டெடுத்து காப்பாற்றியது எடப்பாடி பழனிச்சாமி தான்.
இந்த உண்மையை களத்தில் மக்களை சந்தித்த நாங்கள் சொல்வோம். எடப்பாடி பழனிச்சாமி எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை மக்கள் சக்தி தான் தீர்மானிக்க முடியும். எந்த சக்தியாலும் அதிமுகவுக்கு சேதத்தை ஏற்படுத்த முடியாது. எடப்பாடி பழனிச்சாமி விவேகத்துடன் செயல்பட்டு 4 வருட ஆட்சியை சிறப்பாக நடத்தி முடித்தார். தொண்டர்கள் மிகவும் மன வலிமையுடன் அதிமுகவுக்கு வரும் சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும். அதிமுகவை எதிரிகள் மற்றும் துரோகிகளின் வாதங்களால் அசைந்து கூட பார்க்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவருடைய மறு உருவம் சசிகலா என்று ஆர்பி உதயகுமார் கூறிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை ஜெயலலிதாவின் மறு உருவம் என்று கூறியுள்ளார்.இதனால் நாளை யாரை ஜெயலலிதாவின் மறு உருவம் என்று கூறப் போகிறீர்கள் என்று ரவீந்திரநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.