தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது. அதே நேரத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தேசிய ஜனநாயக உடனே நீடிப்பார்களா என்ற கேள்விக்கு அமித்ஷா அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டார்.

இது பற்றி டிடிவி தினகரனிடம் கேட்டபோது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றார். அதன் பிறகு சமீபத்தில் டிடிவி தினகரன் மீது ஜெயலலிதாவின் புகைப்படம் மற்றும் அதிமுக கட்சி கொடி நிறங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கை வாபஸ் பெற்றார்.

இதன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் நீடிப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, பங்காளி சண்டைகளை மறந்து அனைவரும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் முதல் கடமை.

ஒரு பூ மலர்கிறது என்றால் கண்டிப்பாக அது இலையின் மீதுதான். குளத்தில் இலைக்கு மேல்தான் பூ இருக்கும் என்றார். அதாவது இரட்டை இலை சின்னத்தின் மீது தாமரை மலரும் என்று நயினார் நாகேந்திரன் சொன்னது பற்றிய கேள்விக்கு டிடிவி தினகரன் இவ்வாறாக பதில் வழங்கினார்.

மேலும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அமித்ஷா அறிவித்து விட்டதாக டிடிவி தினகரன் கூறியதோடு தங்களுக்குள் இருக்கும் பங்காளி சண்டைகளை மறந்து கண்டிப்பாக திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று கூறினார்