
புதுக்கோட்டை மாவட்டம் களாமாவூர் கொம்பத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய அற்புதம் (19) என்பவருக்கும், திருமயம் அருகேயுள்ள மணவாளங்கரை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (30) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. நேற்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு எற்பட்டத்தால் ஜெய அற்புதம் தற்கொலை செய்து கொண்டார்.
உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், கருவேப்பிலையான் கேட் பகுதியில் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்கள், ஜெய அற்புதத்தின் உயிரிழப்பிற்கு அவரது கணவர் வீரமணியும், அவரது குடும்பத்தினரும் காரணம் எனக் குற்றம்சாட்டி, உடலை வீரமணி இல்லத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, போலீசாரும் உறவினர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், போலீசார் உடலை நேரடியாக இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து ஜெய அற்புதத்தின் தாயார் மாரிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக வீரமணி மற்றும் அவரது தாயார் வள்ளிக்கண்ணு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.