
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தற்போது ஒரு பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் நீதிபதியின் தீர்ப்பு பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நொய்டாவில் உள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி டெல்லியில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பார்ட்டிக்கு சென்றார். அப்போது அவர் சந்தித்த ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்படவே பின்னர் அவருடைய வீட்டிற்கு சென்றார்.
அந்த நபர் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண் தன்னுடைய விருப்பப்படி தான் தன்னுடன் வீட்டிற்கு வந்ததாகவும் தன்னுடன் உறவு வைத்ததாகவும் கூறினார்.
அதோடு தனக்கு ஜாமின் வேண்டும் எனவும் அந்த நபர் ஜாமீன் மனு கொடுத்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய போது நேரடியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆதாரம் இல்லை என்று நீதிபதிகள் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங் “அந்தப் பெண் பிரச்சனையை தானாகவே தேடிக் கொண்டவர்” என்று தன் தீர்ப்பில் கூறினார். மேலும் கல்லூரி படிப்பை முடித்த ஒரு பெண் தன்னுடைய நடவடிக்கைகள் மற்றும் அதன் மீதான பின் விளைவுகளை புரிந்து கொள்ளக் கூடியவராக இருப்பவர் என்றும் குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பு வழங்கினார்