
பீகார்: மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி சுஷ்மா தேவி, திருமணத்தை மீறிய உறவுக்காக கணவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷ்மா, கயா மாவட்டத்தில் உள்ள டெட்டுவா கிராமத்தைச் சேர்ந்தவர். சுஷ்மா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கணவர் ரமேஷின் கையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ரமேஷ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் வீட்டிற்கு வந்தபோது சுஷ்மாவின் அறையில் ஒரு இளைஞரைப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.
சண்டையின் பின்னர் ரமேஷ், வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுஷ்மாவை சுட்டதாக அவரது சகோதரி பூனம் தெரிவித்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சாய்ந்த சுஷ்மாவை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி ரமேஷ் தலைமறைவாக இருப்பதால், அவரை தேடி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியும், முக்கிய ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது” என கூறி, முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.