கர்நாடக மாநிலம் பெங்களூரில் லோக்நாத் (43)-மம்தா (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் லோக்நாத் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள் குடும்பத்துடன் ஹாசன் குடியிருப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக லோக்நாத் மற்றும் மம்தா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மம்தா தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக உயர் போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார். இதற்கிடையில் நேற்று வேலைக்கு செல்வதற்கு முன்பாக தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்திவிட்டு லோக்நாத் சென்றுள்ளார்.

அவர் வேலைக்கு சென்ற பிறகு மம்தா நேற்று ஹாசன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் கொடுப்பதற்காக சென்றுள்ளார். இதைப் பார்த்த லோக்நாத் தன்னுடைய மனைவியை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் அவருடைய மனைவி உயர் அதிகாரியிடம் புகார் கொடுப்பேன் என்று கூறினார். இதனால் அத்திரமடைந்த லோக்நாத் தன்னுடைய மனைவியை கத்தியால் வயிறு மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே தன் மனைவி மீது கொடூர தாக்குதல் நடத்திய நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து லோக்நாத் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் பட்டப்பகலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொலை நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.