2017 ஆம் ஆண்டு கேரளத் திரை உலகில் நடிகை ஒருவருக்கு நடந்த கொடுமையை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மலையாள திரை உலகில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை ஆராயத் துவங்கியதில் பாலியல் தொல்லை, வசதி இல்லாமை, பாகுபாடு, ஊதிய ஏற்றத்தாழ்வு போன்றவற்றை பெண்கள் திரையுலகில் அனுபவிக்கிறார்கள் என்பதை கண்டறிந்தது.

மேலும் ஒரு காட்சியில் ஒரு பெண் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருடனே நடிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. கணவன் மனைவியாக நடிக்க வேண்டிய அந்த காட்சியில் அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் பணத்திற்காக தான் பெண்கள் சினிமாவிற்கு வருகிறார்கள் என்ற தவறான கருத்தும் நிலவுவதாகவும் புகார் செய்ய பெண்கள் பயப்படுவதாகவும் புகார் செய்தால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அறிக்கை கூறுகிறது.

இப்படி மலையாள திரையுலகில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. இது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.