
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தெற்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு. இவர் தொழிலதிபர். அதே பகுதியைச் சேர்ந்த தியாகுவின் நண்பர்களான பொன்னரசன், சுரேஷ் ஆகிய இருவரும் திண்டுக்கல் வரை தொழில் சம்பந்தமாக சென்று வரலாம் என கூறி நேற்று முன்தினம் தியாகுவை காரில் அழைத்து சென்றுள்ளனர்.
அன்றைய தினமே நண்பர்கள் 2 பேரும் தியாகுவின் உறவினரான அஜித் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தியாகு உயிரோடு கிடைக்க வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அஜித் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் அந்த எண்ணை ட்ரேஸ் செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதனால் போலீசார் நேற்றிரவு சம்பவ இடத்திற்கு சென்று தியாகுவை மீட்டு பொன்னரசன், சுரேஷ், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கண்ணன், முத்துப்பாண்டி, கருப்பசாமி, ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் கருப்பசாமி தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாவது பாட்டாலியனில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.