சீனாவின் உத்தரவின் பேரில் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

‘நியூஸ் கிளிக்’ தனது அறிக்கையில், தங்களுடைய நிறுவனம் ஒரு சுதந்திரமான செய்தி இணையதளம் என குறிப்பிட்டுள்ளது. சீன நாட்டுக்காக நேரடியாக சீன அரசு அல்லது சீன நிறுவனம் மூலமாக எந்த செய்தியையும் அல்லது தகவலையும் வெளியிடவில்லை. சீன நாட்டுக்காக எந்த பிரச்சாரத்தையும் இணையதளத்தில் பரப்பவில்லை என நியூஸ் கிளிக் தெரிவித்துள்ளது. அதேபோல சீனா அரசிடம் இருந்து பணம் எதையும் பெறவில்லை எனவும், சீன அரசுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள அமெரிக்க தொழில் அதிபர் நெவில் ராய் சிங்கத்திடமிருந்து தாங்கள் வழிகாட்டுதலை பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அது தவிர ‘நியூஸ் கிளிக்’ வெளிநாட்டில் இருந்து பெற்ற நிதிகள் அனைத்துமே சரியான முறையில் பெறப்பட்டுள்ளது. வங்கி கணக்குகள் மூலம் பெறப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விதிகளின்படி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரபிர் புர்கயஸ்தா நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி போலீஸ் காவலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட்டுள்ளார். அங்கே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த அமைப்பின் மனித வளத்துறை தலைவரான அமித் சக்கரவர்த்தியும் போலீஸ்காவலில் விசாரணையில் இருக்கிறார். இந்நிலையில்தான் நியூஸ் கிளிக் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நியூஸ் கிளிக் சிக்கலில் சிக்கியது எப்படி?

மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருப்பது என்னவென்றால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீன அரசு மிகவும் சரியான முறையில் கொரோனா பெருந்தொற்றை கையாள்வதாகவும், ஆனால் அதே மாதிரி சிறப்பான முறையில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையாளவில்லை எனவும் ராய் சிங்கத்தின் அறிவுரைப்படி நியூஸ் கிளிக் பிரச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, சீன நாடு செய்து வருவது சரி எனவும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்வது சரியல்ல எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதை தவிர இந்தியா – சீனா எல்லை பிரச்சனை இருக்கும் போது கடல் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் பிற நாடுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கும் என்பதெல்லாம்  சரியல்ல என்பது போலவும், சீன நாட்டை இந்தியா எதிர்ப்பது சரியல்ல என்பதற்காகவும், பிரச்சாரத்தை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வகைகளில் சீன நாட்டுக்கு எதிரான தகவல்களை மறுத்தும், சீன நாட்டுக்கு ஆதரவான தகவல்களை பரப்பியும் பிரச்சாரம் செய்ததாக நியூஸ் கிளிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.