
தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சென்றதோடு கையில் பதாகைகள் ஏந்தி சட்டசபையில் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக சபாநாயகர் அ.தி.மு.கவினரை சபையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதிமுகவினர் அவையை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு யார் அந்த சார் என்று கேட்டால் பயப்படுகிறது. புதிய திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படாத நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
ஆளுநர் உரையை சபாநாயகர் உரையாக மாற்றிவிட்டனர். இந்த அரசின் சாதனை திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது தான். முதல்வர் ஸ்டாலின் கருப்பு நிறத்தை கண்டால் ஏன் பயப்படுகிறார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதோடு எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. முதியவர்கள் முதல் சிறுமிகள் வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படும் நிலையில் இந்த அரசு செயலாற்ற அரசாங்கமாக மாறிவிட்டது. ஆளுநர் உரை என்பது வெறும் காற்றடைத்த பலூன் போன்று தான் இருந்தது. ஆளுநர் உரை சபாநாயகர் உரையாக மாற்றப்பட்ட நிலையில் அதில் திமுக அரசின் சுய விளம்பரத்தை தவிர எதுவுமே இல்லை. மேலும் ஆளுநர் அவையை புறக்கணிக்கவில்லை வேண்டுமென்றே அவரை திட்டமிட்டு வெளியேற்றி விட்டார்கள் என்று கூறினார்.