ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்த தாக்குதலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆதில் உசேன் தோக்கர் என்ற நபர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஸ்ரீநகர் அருகே உள்ள குர்ரே கிராமத்தைச் சேர்ந்த ஆதில் உசேன், 2018ஆம் ஆண்டு மாணவர் விசாவை பயன்படுத்தி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அங்கு, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றார் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் சென்றவுடன், குடும்பத்துடன் உள்ள தொடர்பை முற்றிலும் துண்டித்ததாகவும், பாகிஸ்தான் செல்லும் முன்பே தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2018 முதல் பாகிஸ்தானில் தங்கியிருந்த ஆதில் உசேன், 2024ல் பூஞ்ச்-ரஜோரி பகுதிகளில் கரடுமுரடான மலை வழியாக, மூசா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனந்த்நாக் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த குழுவுடன் சேர்ந்து பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் சுற்றுலா சீசன் தொடங்கும் நேரத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடுகள் சோதனையிடப்பட்டு, அதில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சில வீடுகள் வெடி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முழு சதித் திட்டத்தை வெளியே கொண்டு வருவதற்காக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.