உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சட்டதாரி கேடா கிராமத்தில் சோம்வதி என்ற பெண்மணி தன்னுடைய கணவன் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சம்பவ நாளிலும் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் உள்ள மற்றவர்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த ஒரு திருவிழாவை காண்பதற்காக சென்று விட்டனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை தீவிரமானதால் கோபத்தில் சோம்வதி வீட்டில் இருந்த எரிபொருளை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.

அந்த சமயத்தில் அவருடைய கணவன் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸை வரவழைத்தனர். பின்னர்  அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அந்த பெண் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி  அந்த பெண் உயிரிழந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.