
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு 2028 -ஆம் ஆண்டுக்குள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விமான நிலையம் அமைக்க விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்யக்கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சர்வதேச ஒப்பந்த புள்ளி கோரியது.
இதனையடுத்து கடந்த ஆறாம் தேதியுடன் முதலாவதாக நீட்டிக்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக அமைய உள்ள விமான நிலையங்களில் விமான போக்குவரத்து விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு போன்றவை குறித்து ஆய்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிடைக்கும் வருவாய், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, மேம்பாட்டு பணி, விமான நிலைய மேம்பாடு, சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான விரிவான திட்டம் மற்றும் திட்ட வரைபடம் போன்றவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 15 வருடங்களில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி 2023 – 2024 ஆம் ஆண்டு முதல் 2069 – 2070 ஆம் ஆண்டுகள் வரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை பொறுத்து அது தொடர்பாக அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை கூடுதல் ஒப்பந்ததாரர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.