மத்திய மந்திரி அமித்ஷா நேற்று இரவு தமிழகம் வந்தார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  தமிழகம் வந்துள்ள அமித்ஷா பாஜக மாநில தலைவர் குறித்து இன்று விவாதிக்க இருக்கிறார். இன்று விருப்ப மனு தாக்கல் நடைபெறும் நிலையில் நாளை பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும். அதன் பிறகு கூட்டணி கட்சித் தலைவர்களையும் அமித்ஷா சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்திக்க இருக்கிறாராம். இதன்மூலம் இன்று பாமக அதிமுக பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி டிடிவி தினகரன், ஜிகே வாசன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வதிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதாவது அமித்ஷாவை சந்திக்க போகிறீர்களா என்று கேட்டதற்கு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் என்று பதில் சொன்னார். மேலும் அவர் இல்லை என்றும் கூறவில்லை ஆமாம் என்றும் கூறவில்லை. இதன் காரணமாக இன்று கூட்டணி குறித்த அறிவிப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.