சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மாதவரத்திற்கு தன்னுடைய உறவினரை பார்ப்பதற்காக 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 3ஆம் தேதி இரவு வந்துள்ளார். சேலத்தில் இருந்து பேருந்தில் வந்த அந்தப் பெண் மாதவரம் செல்வதற்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்து நின்றார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மாதவரத்திற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் ஆட்டோவில் ஏற மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றினார். அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றபோது அடையாளம் தெரியாத இருவர் ஆட்டோவில் ஏறினர். அந்த ஆட்டோ ஜிஎஸ்டி சாலை வழியாக சென்றபோது இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

அதாவது அந்த பெண்ணுக்கு ஆட்டோவில் இருந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்தப் பெண் கத்தி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவை பின் தொடரவே ஒரு இடத்தில் இளம்பெண்ணை இறக்கி விட்டு விட்டு அவர்கள் சென்று விட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ஐவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ்செல்வன் (56), தயாளன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.