கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மின்னஞ்சல் மூலமாக முதல்வரின் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு அந்த வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வரின் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இதே போல திருவனந்தபுரத்தில் இருக்கும் பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையம், விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பாக போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.