கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ரன்யா‌ ராவ் (32). இவர் கன்னடம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவந்த மாணிக்யா என்ற படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வாகா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த நிலையில் தன்னுடைய உடம்பில் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சோதனை செய்ததில் அவருடைய பையில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

அவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான தங்கத்தை எடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக துபாயிலிருந்து அதனை கடத்தி வந்தது தெரியவந்தது. இவர் கடந்த 15 நாட்களில் நான்கு முறை துபாய்க்கு சென்று வந்ததுள்ளார். இவர் நேற்று முன்தினம் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த நிலையில் ஏர்போர்ட்டில் தங்கத்துடன் சிக்கினார். மேலும் இவருடைய தந்தை ஐபிஎஸ் அதிகாரி என்றும் கர்நாடக மாநிலத்தில் ஏடிஜிபியாக இருக்கிறார் என்றும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.