
ஈரோடு மாவட்டம் பவானியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய ஐந்து மாணவிகள் தேர்வுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பாமல் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 4 மாணவிகளும், சித்தோடு பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வை முடித்த பிறகு மதியம் 1.20 மணிக்கு பள்ளியை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆனால் இரவு 8 மணியாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததிலும், மாணவிகள் அனைத்தும் வெளியேறியதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவிகள் வீடு திரும்பவில்லை என்பதால் உறவினர்கள் மற்றும் தோழிகள் வீட்டிலும் கேள்வியிட்டனர். ஆனால் எங்கே சென்றனர் என்பது பற்றி எந்த தகவலும் தெரியாததால், பெற்றோர் பவானி போலீசில் புகார் அளித்தனர்.
பவானி டிஎஸ்பி தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. போலீசார் பள்ளி அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை சோதித்து, மாணவிகள் எந்த திசையில் சென்றனர் என்பதை கண்டுபிடிக்க முயன்றனர். மேலும், அவர்களிடம் செல்போன் இருந்ததா என்றும், கடைசியாக யாருடன் பேசினர் என்றும் விசாரித்தனர்.
விசாரணையின் போது, மாணவிகளில் ஒருவரிடம் இருந்த செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்ததில், அது திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் செயல்பட்டதாக தெரியவந்தது. உடனடியாக தகவல் திருச்சி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் லால்குடி டிஎஸ்பி மற்றும் சமயபுரம் போலீசார் இணைந்து, சமயபுரம் கோவில் அருகே 5 மாணவிகளையும் மீட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
விசாரணையில் மாணவிகள், தேர்வுகள் முடிந்ததையடுத்து சமயபுரத்தில் நடைபெற்று வந்த தேர் திருவிழாவைக் காணவும், மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பயணித்ததாகவும் தெரிவித்தனர்.
பெற்றோரிடம் சொல்லாமல் சென்றது தவறான முடிவு என்பதையும் ஒப்புக்கொண்டனர். மாணவிகள் 5 பேரும் பவானி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.