கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் அபிதா பிரியாணி கடை பிரபலமானதாகும். இந்தக் கடையின் உரிமையாளர் அமானுல்லா. இந்த நிலையில் பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் பரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் பரோட்டாவிற்கு சால்னா கேட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊழியர் உரிமையாளரை அழைத்துள்ளார். அங்கு வந்த  உரிமையாளர் அமானுல்லா அந்த இரு நபர்களிடம் பணிவாக விசாரித்துள்ளார்.

அவர்கள் கேட்ட உணவை வழங்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த இரு நபர்கள் அமானுல்லாவை தகாத வார்த்தைகளால் பேசி மேலும் ஆவேசமாக தகராறு செய்தனர். இதனால் கடையில் பதற்றம் நிலவியது இந்நிலையில் திடீரென தகராறில் ஈடுபட்ட நபர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அமானுல்லாவை குத்தினார். இதைக் கண்டு பயந்து ஊழியர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அமானுல்லாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தகராறில் ஈடுபட்ட அந்த இரு நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த நபர்களிடம் விசாரித்ததில் அவர்கள் பெயர் கரீம் மற்றும் சமீர் என்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் கரீம், சமீர் மீது வழக்குப்பதிவு செய்து தாக்குதல் குறித்து விசாரித்து வருகின்றனர். பிரபலமான பிரியாணி கடையின் உரிமையாளருக்கு நடந்த தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.