தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மெட்செல் நகரில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உரிமையாளரும் ஊழியரும் நேற்று மதியம் அமர்ந்திருந்த போது பைக்கில் வந்த இருவர் நகை வாங்குவதுபோல கடைக்குள் வந்துள்ளனர். அதில் ஒருவர் புர்கா அணிந்திருந்த நிலையில் மற்றொருவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். இருவரும் கடைக்குள் வந்து திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி உரிமையாளர் மற்றும் ஊழியரை மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன ஊழியர் கடையின் உள்ளே உள்ள அறைக்குள் சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளரை மிரட்டிய கொள்ளையர்கள் நகைகளை தரும்படி கூறினர். இதற்கு கடை உரிமையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் அவருடைய கழுத்து அருகே கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பர்தா மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த நகைகளை திருடி தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.