
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. அந்த சமயத்தில் மதிய வேளையில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அப்போது பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளை நொடிந்து விழுந்த நிலையில் மரத்துக்கு அடியில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் ஆயக்குடியை சேர்ந்த காளியம்மாள் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அதோடு தட்டான் குளம் பகுதியில் கணேசன் என்பவரின் வீட்டின் மேற்கூரை சூறாவளி காற்றுக்கு பறந்து விழுந்து சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து பலத்த காற்றின் காரணமாக 15 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதில் குறிப்பாக கீரனூரில் இருந்து பழனி நோக்கி அரசு டவுன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நரிக்கல்பட்டி அருகே வந்தது. அப்போது திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் அந்தப் பேருந்தின் மேற்கூரை திடீரென காற்றில் பெயர்ந்து கீழே தொங்கியது. . இதனைக் கண்டு அச்சமடைந்த பயணிகள் பதட்டத்தில் அலறினர். இதைத்தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அதன்பின் பேருந்தில் உள்ள பயணிகள் வேறொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சூறாவளி காற்றால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.