
சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விஜய் மற்றும் திருமாவளவன் கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் வெளியானதால் தற்போது அந்த நிகழ்ச்சியை அவர் தவிர்த்து விட்டதாக கூறியுள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கர் தொல். திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அவருக்கு அறிவுரை வழங்கி ஒரு போஸ்டை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
கோவில் யானை திருமாவளவன் !
வரலாறு எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கி விடாது. அப்படி வாய்ப்புகள் வருகையில் அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர் வரலாற்றில் இடம் பிடிப்பார். தவற விடும் நபர், வரலாற்றின் கடைசிப் பக்கங்களில் குறிப்புகளாக ஒதுக்கப்படுவார்.
தமிழகத்தில் எத்தனையோ தலித் தலைவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் அனேகமாக ஒருவர் கூட காலத்தை கடந்து நின்றதில்லை.
காலத்தை கடந்த தலைவனாக உருவெடுக்க வரலாறு திருமாவளவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
வட தமிழகத்தில் இருக்கும் ஆதி குடிகளான பறையர் சமூக மக்களுக்கு இது வரை அடையாளம் கிடைத்தது இல்லை. அவர்களை இந்நாள் வரை வெறும் வாக்கு வங்கிகளாகவே அனைத்து கட்சிகளும் பயன்படுத்தி வந்தன. முதல் முறையாகமுதல் முறையாக அவர்களுக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்தவர் திருமாவளவன். ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை வடித்தெடுத்தவர் திருமாவளவன். இரண்டு அல்லது மூன்று சீட்டுகள் பெறும் கட்சி என்ற நிலையிலிருந்து, ஒரு அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் உருவாக வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆனால், மீண்டும் ஒற்றை இலக்கத்திலேயே விடுதலை சிறுத்தைகளை தேக்கும் நிலைக்கு திருமாவே எடுத்துச் செல்கிறார்.
1991ம் ஆண்டு வெறும் ஒரு எம்.எல்.ஏவை பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி, 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் 20 எம்.எல்.ஏக்களை பெற்று பெறும் அரசியல் சக்தியாக உருவெடுத்தது, அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் புத்திகூர்மையாலும், சாதுர்யத்தாலும். பாமக ஒரு பெரும் அரசியல் சக்தியாக உருவாக வேண்டும் என்பதை மனதில் வைத்து அவர் செய்த நகர்வுகள், அக்கட்சியை இன்று வரை ஒரு பெரும் சக்தியாக வைத்திருக்கிறது. அப்படி சாதுர்யமான நகர்வுகளைச் செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்கும் வாய்ப்பு திருமாவளவனுக்கு கிடைத்திருந்தது. முன்னெப்போதையும் விட ஒரு பலவீனமான நிலையில் திமுக இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகள் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
பாமக பாஜக அணியில் இருக்கிறது. வட தமிழகத்தில் வெற்றியை பெற, திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் மிக மிக அவசியம். புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய், அதிகாரத்தில் பங்கு என்ற வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். அதிமுகவோ இரு கரங்களோடும் விடுதலை சிறுத்தைகளை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையை பயன்படுத்தி தனது நிலையையும், விடுதலை சிறுத்தைகள் நிலையையும் ஒரு பெரும் அரசியல் சக்தியாக உயர்த்தும் வாய்ப்பு திருமாவளவனுக்கு கிடைத்துள்ளது.
இந்த சூழலில் நடக்கும் நிகழ்வுதாந், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழா. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்கிறார்.
ஒரு சாதுர்யமான, புத்திகூர்மையுடைய தலைவராக திருமா இருந்திருந்தால், இந்நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டிருப்பார். திருமாவளவன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, விஜயுடன் நட்பை உருவாக்கியிருக்க வேண்டும். அந்த நட்பு அவர் திமுக கூட்டணியிலேயே தொடர்வதற்கு உதவியிருக்கும். திமுக கூட்டணியில் அவர் நிலையை மேலும் வலுவாக்கியிருக்கும்.
நிகழ்வில் கலந்துகொண்டு, விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு குரல் கொடுத்த விஜய்க்கு நன்றி என்று பேசியிருக்க வேண்டும். ‘வாய்ப்பு இருந்தால் வரும் காலத்தில் இணைந்து பயணிக்கலாம். இருவரும் இணைந்து மாற்று சக்தியாக உருவாக முடியும். காலம் முடிவு செய்யும்’ என்று திருமா பேசியிருந்தால், இன்று திருமாவை கருவேப்பில்லை போல பயன்படுத்தும் திமுக, அச்சத்தோடு பார்க்கும்.
உதயநிதி தன் பிறந்தநாளுக்கு திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பார். அவர் கட்சி எம்.எல்.ஏவை உள்ளே விடாமல் தடுத்த நிகழ்வு நடந்திருக்காது. திருமா கூட்டணியை விட்டு போய் விடப்போகிறாரோ என்ற அச்சத்தில் உரிய மரியாதையை கொடுப்பார்கள். அவர் பலத்தை புரிந்து கொள்வார்கள்.
ஆனால், ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒப்புக்கொண்ட ஒரு நிகழ்வுக்கு, அதுவும் அவர் மிகவும் நேசிக்கும் அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு, விஜய் கலந்து கொள்கிறார் என்பதற்காக, திமுகவினர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, இந்நிகழ்வில் கலந்துகொள்வதை தவிர்ப்பது, திருமாவளவனின் பலவீனத்தையே காட்டுகிறது.
இந்நிகழ்வு திருமாவளவனுக்கு காலம் தந்த அற்புதமான வாய்ப்பு. கோட்டை விட்டு விட்டார்.
இன்றைய நிலையில் விடுதலை சிறுத்தைகளுக்கு திமுக அவசியமில்லை. திமுகவுக்குத்தான் விடுதலை சிறுத்தைகள் அவசியம்.
யானை எத்தனை பலம் கொண்ட மிருகம் ? ஆனால் அது தன் பலம் தெரியாமல் கோவில் வாசலில் என்ன செய்து கொண்டிருக்கிறது ?
கோவில் யானை திருமாவளவன் !
வரலாறு எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கி விடாது. அப்படி வாய்ப்புகள் வருகையில் அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர் வரலாற்றில் இடம் பிடிப்பார். தவற விடும் நபர், வரலாற்றின் கடைசிப் பக்கங்களில் குறிப்புகளாக ஒதுக்கப்படுவார்.
தமிழகத்தில் எத்தனையோ தலித்… pic.twitter.com/VdJttMFXhb
— Savukku Shankar (@SavukkuOfficial) November 30, 2024