
சென்னையில் மிகவும் முக்கிய பகுதியான தி நகர் மற்றும் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கே தினந்தோறும் வரும் மக்களின் கூட்டம் ஏராளம். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பாண்டிபஜார் மற்றும் தி நகரில் உள்ள சில வணிக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் இருந்துள்ளன. இதற்காக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் சில நிறுவனங்கள் வரிபாக்கி வைத்துள்ள செய்தி தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் 15 மாநகராட்சி மண்டலங்களில் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்காக அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் இங்குள்ள பகுதிகளில் வரி செலுத்தாத கடைகளுக்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தி நகரில் உள்ள 30 கடைகளில் மொத்தம் 90 லட்சம் ரூபாய் வரி செலுத்தாமல் இருப்பது தெரிய வந்தது. இதேபோன்று ரங்கநாதன் தெருவிலுள்ள சில கடைகளிலும் வரி பாக்கி இருப்பது தெரியவந்தது. அதன்படி மொத்தம் 43 கடைகளில் வரி பாக்கி இருந்துள்ளது. சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து வரி நிலுவையில் இருந்துள்ள நிலையில் அந்த கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், சென்னையில் சொத்து மற்றும் வீட்டு வரியினால் வரும் வருவாயை வைத்து சாலை பணிகள் செய்து வரும் நிலையில் வரி செலுத்தாமல் இருக்கும் வணிக நிறுவனங்களால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.