
தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் போராட்டம் நடத்த தடை விதித்த போதிலும் அவர்கள் அதனை மீறி முன்பு அறிவித்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அதற்கு பதிலாக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அதன் பிறகு அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பேசினர். இது தொடர்பாக அரசின் சார்பில் 4 மாதம் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளதோடு போராட்டங்களை கைவிடுமாறும் கூறினர்.
ஆனால் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பேசி இனியும் கால அவகாசம் கொடுக்க முடியாது என்பதால் இன்று திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். அதன்படி ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை கால அவகாசம் தான் கேட்டுள்ளனர். அதனால்தான் மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் என்று கூறினார். மேலும் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலையில் தங்களுடைய கோரிக்கைகள் பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.