அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசின் கொள்கை முடிவு எனவும் அது தொடர்பாக பெறப்பட்ட ஆய்வு முடிவுகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அமைச்சர் பதிலுரை வழங்குவது வழக்கமாகிவிட்டது. இதிலிருந்தே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதியாக புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இருப்பினும் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. அதன்பிறகு இமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அது சாத்தியமாகவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.