ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என்று கூறப்படுவதால் கண்டிப்பாக அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன்படி இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதோடு சிந்து நதிநீரையும் நிறுத்திவிட்டது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 6 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தற்போது அந்த மாநில முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதோடு இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மகராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.