மேற்குவங்க மாநிலம் பதூரியாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சாபிர் ஹுசைன், பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலாப் பயணிகளை மத அடையாளத்தின் அடிப்படையில் குறிவைத்து கொலை செய்ததைத் தொடர்ந்து, இஸ்லாமிய மதத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். தனது மத அடையாளத்தை உத்தியோகபூர்வமாகத் துறக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

தனது முடிவை பற்றி அவய் பேசும் போது, சாபிர் ஹுசைன் கூறுகையில், “எந்த மதத்தையும் அவமதிக்க விரும்பவில்லை. இது என் தனிப்பட்ட விருப்பம். மதம் எவ்வாறு மாறி, வன்முறைக்கு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பலமுறை பார்த்திருக்கிறேன், குறிப்பாக காஷ்மீரில். இனி அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு மனிதனாக மட்டும் அறியப்பட விரும்புகிறேன், மத அடையாளத்தால் அல்ல. அதனால் நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பம் செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

முதலில் தனது முடிவை ஃபேஸ்புக் வழியாக அறிவித்த சாபிர் ஹுசைன், பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து இஸ்லாமிய மதத்துடன் தன்னுடைய தொடர்பை முற்றிலும் துண்டிக்கப்போவதாக கூறினார். மேலும், “என் மனைவியும் குழந்தைகளும் தங்களது விருப்பப்படி வாழத் தகுதியுடையவர்கள். நான் அவர்களது விருப்பங்களில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இது என் தனிப்பட்ட பயணம்” என்றும் கூறினார்.

இப்போது எல்லாவற்றிலும் மதம் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அது போன்ற உலகில் வாழ நான் விரும்பவில்லை என்றும் சாபிர் ஹுசைன் குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலின் பின்னணியில், மத அடையாளங்களை நியாயமாக்கி வன்முறையைப் பரப்பும் நிலைக்கு எதிராக தன்னைத் தெளிவாகப் பிரித்துக்கொள்ளும் முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.