ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர்  பலியானதை தொடர்ந்து, இந்தியா நீதிக்காக போராடி வருகின்றது. இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ தலைவர் ஜெனரல் சயீத் ஆசிம் முநீர் நாடு விட்டுப் போயிருக்கலாம் என்ற தகவல்கள் பரவியுள்ளன. இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் உள்ளூர் வட்டாரங்களின் தகவலின்படி, பாகிஸ்தான் இராணுவத் தலைவர் காணாமல் போயிருக்கிறார் என கூறப்படுகிறது.

சில செய்தி நிறுவனங்கள், இதனைச் சுயமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், முநீர் ராவல்பிண்டியில் உள்ள ஒரு பதுங்கு குழியில் மறைந்து இருப்பதாக கூறுகின்றன. இந்த வதந்திகள் இருநாடுகளிலும் பரவி வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு பதில் நடவடிக்கையாக ‘அனைத்தும் நன்றாக உள்ளது’ என்பதை நிரூபிக்க புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில்  குழுப்புகைப்படம் வெளியிடப்பட்டது. இதில் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் ஜெனரல் ஆசிம் முநீர் முன்னணி வரிசையில் அமர்ந்திருப்பது காட்டப்பட்டது. “பாகிஸ்தான் ராணுவக் கண்காணிப்பு அகாடமி, காகுல் பகுதியில் நடைபெற்ற  பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மற்றும் ராணுவத் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். தேதி: ஏப்ரல் 26, 2025” என குறிப்பிட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் மோசமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது குறித்து உளவுத்துறைஉறுதி செய்த பின்னர், இந்தியா முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையாக சிந்து நதி ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத முக்கியமான முடிவாகும். பாகிஸ்தான் இதனை ‘சட்டவிரோதமான முடிவு’ என்று கண்டித்துள்ளது.

இதே நேரத்தில், ஜெனரல் ஆசிம் முநீர் தொடர்ந்து தனது கருத்துகளால் சர்ச்சையை உருவாக்கி வருகிறார். பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், முநீர் காஷ்மீரை “பாகிஸ்தானின் உயிர்நாடி” என குறிப்பிட்டார். மேலும், ஏப்ரல் 26 அன்று பாகிஸ்தான் ராணுவக் கண்காணிப்பு அகாடமியில் நடைபெற்ற விழாவில், ‘இரு தேசியக் கோட்பாடு’ பற்றி பேசினார். “இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைத்து அம்சங்களிலும் வேறுபட்டவர்கள்” என அவர் கருத்து தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே நான்கு முறை போர் நடத்தியுள்ள நிலையில், தற்போதைய பதற்றம் புதிய மிகப்பெரிய உருக்குலைவை ஏற்படுத்தும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது. மேலும் தளபதிகளின் ராஜினாமா குறித்து லெப்டினென்ட் ஜெனரல் உமர் அகமத்தின் கடிதம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.