ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அங்கு பயணம் செய்த சில சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்களில், பஹல்காம் தாக்குதலின் சோகத்தை புறக்கணித்து, மகிழ்ச்சியாகப் பேசும் நிலை காணப்பட்டது.

 

ஒரு வீடியோவில், ஒரு பெண், “நாங்கள் காஷ்மீருக்கு வந்திருக்கிறோம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். பஹல்காமில் சின்னதா ஒரு விஷயம் நடந்தது,” என்று சொல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவருடன் இணங்கி, “இப்படிப்பட்ட சின்ன சின்ன விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கும்” எனவும் கூறியுள்ளனர். இந்த பேச்சுகள் சமூக ஊடகங்களில் பெரும் கண்டனத்தைத் தூண்டியுள்ளது.

சமூக வலைதள பயனாளர்கள், இந்த வீடியோக்கள் சம்பந்தப்பட்டவர்களை “மனித  நேயமற்றவர்கள்”, “பொறுப்பில்லாதவர்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். “இதே விஷயம் இவர்களுக்கு நேர்ந்திருந்தால் அவர்கள் இதை எப்படி எடுத்திருப்பார்கள்?” என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இந்த தாக்குதல், ஹிந்து சுற்றுலா பயணிகளை குறிவைத்து நிகழ்ந்தது என்பதால், ஏற்கனவே பதற்றமாக உள்ள பிராந்தியத்தில் மேலும் தீவிரம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மீது பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கிறதென்று குற்றம்சாட்டி, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முடிக்கவும், எல்லைப் பாதைகளையும் மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது இருநாட்டு உறவில் கடுமையான முறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.