ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அடில் உசேன் தோகரை மையமாக கொண்டு பாதுகாப்புப் படைகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், அடிலின் தாய் ஷாஜாதா பானோ அளித்த அதிரடி பேட்டி தற்போது மாநிலத்திலும் நாட்டிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடிலுடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் எந்த தொடர்பும் இல்லை என கூறிய அவர், “அவன் 2018ல் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவன். அதன்பின் ஒரு நாள் கூட பேசவில்லை. என் மகன் உண்மையாகவே பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருந்தால், தயங்க வேண்டாம் – நேராக சுட்டுவிடுங்கள்,” என உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார். மேலும், “அவன் உயிருடன் இருந்தால் சரணடையட்டும். இல்லையெனில், பாதுகாப்புப் படைகள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யட்டும்,” எனவும் கூறினார்.

பாதுகாப்புப் படையினர் அடிலை தேடி அனந்த்நாக், பிஜ்பேரா பகுதிகளில் தொடர்ந்து சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். NIA வெளியிட்ட மூன்று முக்கிய பயங்கரவாதிகளின் ஸ்கெட்ச் படங்களில் அடிலும் ஒருவராக இருக்கிறார். பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக கூறப்படும் அடில், பைசரான் பள்ளத்தாக்கு தாக்குதலில் முக்கிய திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளுக்குப் பங்காற்றியதாக கூறப்படுகிறது. அவரது தாயின் வாக்குமூலம் இந்த விசாரணைக்கு மேலும் முக்கியதுவை அளித்துள்ளது.