
பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்ட தலைநகரான வானா பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் அமைதி குழு அலுவலகத்தில் (peace committee Pakistan) இன்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் பலத்த காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருந்ததால், அமைதி குழு அலுவலகக் கட்டிடம் முற்றாக இடிந்து விழுந்தது. பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்தவுடன் மீட்பு குழுவினரும் உள்ளூர்வாசிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மருத்துவமனை நிர்வாகத்தினரின் தகவலின்படி, வெடிவிபத்திற்குப் பிறகு 16 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வெடிவிபத்திற்குப் பின்னால் காரணம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்குப் பொறுப்பு ஏற்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசும் பாதுகாப்பு நிறுவனங்களும் சம்பவ இடத்தை சீல் வைத்து, சாட்சியங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
2022 நவம்பரில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புடன் அமைதிச் சேந்தி உடன்பாடு முறிந்த பிறகு, பாகிஸ்தானில், குறிப்பாக கைபர் பக்தூன்க்வா மற்றும் பலூச்சிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.