
ராஜஸ்தானைச் சேர்ந்த 35 வயதான ஒரு நபர், குவைத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தனது மனைவிக்கு தொலைபேசியில் 3 முறை தாலாக் கூறிவிட்டு, பின்னர் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் ரெஹ்மான். இவர் சமூக வலைதளம் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த மெஹ்விஷ் என்ற பெண்ணை சந்தித்து, சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணை விசா மூலம் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், ரெஹ்மானின் முதல் மனைவி பரிதா பானு என்பவர், கணவர் மீது மணமோசம் மற்றும் தாலாக் கொடுத்ததாக புகார் செய்துள்ளார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், குவைத்தில் இருந்து இந்தியா வந்த ரெஹ்மானை கைது செய்துள்ளனர். ரெஹ்மான் மற்றும் பரிதா பானு ஆகியோருக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்ப செலவுக்கு குவைத்து சென்ற ரெஹ்மான் அங்கு போக்குவரத்து துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது ரெஹ்மான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.