நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் அருமையான அசத்தலுடன் சதம் விளாசி கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார். 22 வயதான இவர், 44 பந்துகளில் சதம் அடித்து, பாகிஸ்தான் அணிக்காக அதிவேக சர்வதேச டி20 சதம் அடித்த வீரராக வரலாறு படைத்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்ட பாகிஸ்தான், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் ஹசன் நவாஸ் மாபெரும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முன்னதாக, நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. மார்க் சேப்மேன் 44 பந்துகளில் 94 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். 205 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்க, துவக்க வீரர்களில் ஹசன் நவாஸ் வெறித்தனமான ஆட்டம் ஆடினார். முகமது ஹாரிஸ் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த பின், கேப்டன் சல்மான் அலி ஆகா களத்தில் இறங்கி, இருவரும் இணைந்து நியூசிலாந்து பந்துவீச்சை சிதைத்து வைத்தனர்.

ஹசன் நவாஸ் 45 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து, 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சல்மான் அலி ஆகா 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி வெறும் 16 ஓவர்களில் 205 ரன்களை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, தற்போது நியூசிலாந்து மண்ணில் வெற்றி கொடிகாட்டி, ரசிகர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஹசன் நவாஸ், பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் செய்ய முடியாததை செய்துள்ளார் என அவரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.